திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடள் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்தை தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில், தேவ மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர். இதையடுத்து. 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. காலை மற்றும் இரவு நேர உற்சவத்தில், பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தனர். 6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்களும் காலையிலும், வெள்ளி தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகள் இரவும் பவனி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, 7-ம் நாள் உற்சவத்தில், முக்கிய நிகழ்வாக மகாதேரோட்டம், மேள தாளம் முழங்க மாட வீதியில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி விநாயகர் பவனி வந்தார். அவரது திருத்தேர் நிலைக்கு வந்த பிறகு, வள்ளி தெய்வானை சமேத முருகர், தனக்கான திருத்தேரில் எழுந்தருளி வலம் வந்தார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு, திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து பெரியத் தேர் என அழைக்கப்படும் மகா ரதம் புறப்பட ஆயத்தமானது. சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் திருத்தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன், மகா ரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அசைந்து அசைந்து ஆடியவாறு, மகா ரதம் நகர்ந்தது. இதன் மீது மலர்களை தூவி பக்தர்கள் பரசவமடைந்தனர். மாட வீதியில் மகா ரதம் வலம் வந்தபோது, அருள்பாலித்த உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசித்தனர். மேலும் திருவாசகம், தேவாரம், சிவபுராணம் உள்ளிட்டவற்றை உச்சரித்தப்படி, மகா ரதம் முன்பு சென்றனர்.
இதைத்தொடர்ந்து பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு பராசக்தி அம்மன் அருள்பாலித்தார். திருத்தேர் நிலைக்கு வந்ததும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் புறப்பாடு நடைபெறுவதற்கு முன்பாக சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்யப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலையில் தொடங்கி இரவு வரை மகா தேரோட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த திருத்தேர் புறப்பாடு இருந்தது. ஒரே நாளில் 5 திருத்தேர்கள் பவனி வந்தது அண்ணாமலையார் கோயிலுக்கே உள்ள சிறப்பாகும்.
13-ம் தேதி மகா தீபம்: மகா தேரோட்டத்தை தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளன. மூலவர் சந்நிதியில் காலை 4 மணியளவில் ஏகன் - அநேகன் தத்துவத்தை எடுத்துரைக்கும் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர், தங்க கொடிமரம் முன்பு உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, மாலை 5.58 மணியளவில் ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்க சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரவுள்ளார். இதன்பிறகு, 2,668 அடி உயரம் உள்ள, மலையே மகேசன் என போற்றப்படும் திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அப்போது ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி கொடுப்பதால் அண்ணாமலையார் கோயில் நடை சாத்தப்படும். மகா தீபத்தை 11 நாட்களுக்கு தரிசிக்கலாம்.