சபரிமலையில் பக்தர்களின் பாதங்களைக் காக்க நீரை பீய்ச்சியடித்து தரைப்பகுதி குளிர்விப்பு


சபரிமலை சந்நிதான வளாகத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், தரைத்தளத்தை குளிர்க்கவும் நீரை பீய்ச்சியடிக்கும் தீயணைப்பு ஊழியர்கள்.

சபரிமலை: சபரிமலை சந்நிதானத்தில் சூட்டில் இருந்து பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில் தீயணைப்புத்துறை சார்பில் நீர் ஸ்பிரே செய்யப்பட்டு வருகிறது. பம்பை நதியில் பக்தர்கள் சிக்கினால் அவர்களை மீட்க ஸ்கூபா டைவிங் ஊழியர்கள் 5 பேரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் உயர்ந்துள்ளது. இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு படை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கேஎஸ்இபி பாயிண்ட், பஸ்மக்குளம், பாண்டித்தாவளம் உள்ளிட்ட 9 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

இங்கு சுழற்சி முறையில் 75 தீ தடுப்பு ஊழியர்கள், 11 தன்னார்வலர்கள், 1 ஹோம் கார்டு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மூன்று கண்காணிப்பு அறைகள் மற்றும் ஒவ்வொரு தீ பாதுகாப்பு முகாம்களிலும் அவசர தேவைகளுக்காக தலா இரண்டு ஸ்ட்ரெட்சர்கள் மற்றும் பிற உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சிறப்பு அதிகாரி கே.ஆர்.அபிலாஷ் கூறுகையில், “தீ மட்டுமல்லாது நெரிசலை குறைக்க உதவுவது, மருத்துவம் என்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். சந்நிதானம், மாளிகைப்புறத்தம்மன் வளாகங்களில் தூசுகளை அகற்றவும், வெயிலின் தாக்கத்தை குறைத்து பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கவும் நீரை ஸ்ப்ரே செய்து வருகிறோம்.

பம்பை நதி அருகே 80 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இதில் 5 ஸ்கூபா டைவிங் ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் சுவாசக் கருவிகளுடன் ஆழ்கடலில் நீண்ட நேரம் நீந்தி பயிற்சி பெற்றவர்கள் ஆவர். சந்நிதானம் அருகே ஆழிக்குழியில் 24 மணி நேரமும் ஜோதி எரிவது வழக்கம்.

இங்கும் 24 மணி நேர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. இதுவரை நெரிசலை சீர் செய்தல், வனத்தில் சிக்கியவர்கள் மீட்பு, மருத்துவ உதவிக்கு அழைத்துச் செல்லுதல், முதலுதவி என்று 190 அவசர உதவிகளை செய்துள்ளோம். ஏதேனும் அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால் எங்களின் சேவைக்கு (0473) 5202033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

x