கார்த்திகை மாதத்தை தீபங்களின் மாதம் என்கிறோம். தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் வீட்டின் வாசலில் தீபம் ஏற்றி தீப திருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த மாதத்தில் நாம் ஏற்றி வழிபடுகிற ஒவ்வொரு தீபத்திலும் சக்தி குடியேறி, ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில் வீடுகளிலும் வாசலிலும் வரிசையாக விளக்கேற்றி வைப்பது வழக்கம். ஊர்க்கோடியில் உள்ளவர்களும் தரிசிக்கும் வகையில் அந்த காலந்தொட்டே மலையுச்சிகளில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார்கள். குறிப்பாக மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலையில், மலையுச்சியில் தீபமேற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.
பொதுவாகவே, தினந்தோறும் வீட்டின் தலை வாசல்படிகளில் சூரியோதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் விளக்கேற்றி வழிபடுவது எண்ணற்ற பலன்களையும் கொடுக்கும். நம்மைச் சுற்றியும், நமது இல்லத்திலும் நல்ல அதிர்வுகளைத் தரும். தேவதைகளும், அஷ்டதிக் பாலகர்களும் நம்மைக் காப்பார்கள்.
இப்படி கார்த்திகை மாதத்தில் நாம் எத்தனை தீபமேற்றி வழிபடுகிறோமோ அத்தனைப் பலன்கள் உண்டு. நம் வீட்டின் வாசலில் ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் விலகும். ஒன்பது தீபங்களேற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் விலகி விடும்.
12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்ப்புகள் அழியும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
18 தீபங்களேற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும். தனம் தானியம் பெருகும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக சேர்த்து 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் யாவும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட காரியங்கள் விரைவில் நடந்தேறும்.
48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளர்ச்சி பெறும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும்.