காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள இளையனார் வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலான பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று (டிசம்பர் 5-ம் தேதி) நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா இளையனார் வேலூர் கிராமத்தில் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலான ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் மலையன், மாகரன் என்ற இரு அசுரர்களை முருகன் வேல் கொண்டு அழித்து இங்கு இளைப்பாறியதால் இளையனார் வேலூர் என பெயர் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகிறது. திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும், திருமுருக கிருபானந்தா வாரியார் குடமுழுக்கு நடத்திய திருக்கோயில் என பல்வேறு சிறப்புகளை உடையது இந்தக் கோயில்.
இந்த திருக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், குடமுழுக்கு பெரு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவையொட்டி யாக சாலை அமைத்து பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் வைத்து சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் ராஜகோபுரம், மூலவர் சன்னதி கோபுரம், பரிவார சன்னதி கோபுரங்களுக்கு கொண்டு சென்று மந்திரங்கள் ஒலித்தது புனித நீரை ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனர்.
மகா குடமுழுக்கு விழாவில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.