திருச்செந்தூர் கடற்கரையில் கேரள பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு 


தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் கேரள மாநில பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.

உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றத்தில் இருந்து நாடு காக்கப்படவும், மக்கள் நோய் நொடிகள் நீங்கி நலம் பெற வேண்டியும் ஓவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் தீ மிதித்து பூக்குழி இறங்கி வழிபாடு செய்வார்கள்.

இந்தாண்டு நேற்று (டிச.3) மாலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சோமன் சுவாமிகள் தலைமையில் 16 பக்தர்கள் திருச்செந்தூர் சிவன் கோயில் முன்பு இருந்து ஊர்வலமாக மேளதாளம் முழங்க காவடி மற்றும் பன்னீர் குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக திருச்செந்தூர் மூவர் சமாது அருகே உள்ள கடற்கரைக்கு வந்தனர்.

அங்கு சுமார் 15 அடி நீளத்துக்கு பூக்குழி இறங்குவதற்காக தீ வளர்க்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காவடி, பன்னீர் குடம் மற்றும் பால்குடம் எடுத்த 16 பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதனை திருச்செந்தூர் பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தனர். பாதுகாப்புப் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

x