திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தங்கும் விடுதிகளில் பேக்கேஜ் புக்கிங் அமோகமாக நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிச.13-ம் தேதி நடைபெறவுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை தொடர்ந்து மறுநாள் (டிச.14-ம் தேதி) பவுர்ணமியும் வருகிறது. இவ்விழாவுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கணித்துள்ளன. இவர்களில், ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்களின் வருகையும் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகளின் புக்கிங் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ‘பேக்கேஜ் ‘புக்கிங்’ அனைவரது புருவமும் உயர்த்தியுள்ளது. அதாவது, கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 3 நாள் பேக்கேஜ் அறிமுகம் செய்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கும் விடுதி அறைகளின் நிலைக்கு ஏற்ப, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ‘ஆன்லைனில்’ புக்கிங் நடைபெற்றுள்ளது. கட்டணம் பிரதானம் இல்லை, தங்கும் விடுதியில் அறை கிடைத்தால் போதும் என செல்வந்தர்கள் முண்டியடித்து புக்கிங் செய்துள்ளனர்.
பேக்கேஜ் புக்கிங் செய்பவர்களுக்கு ‘பரணி தீபம்’ மற்றும் ‘மகா தீபம்’ எனும் அர்த்தநாரீஸ்வரர் தரிசன நுழைவு சீட்டு வழங்கப்படும் என்ற ‘சூப்பர் ஆஃபர்’ அறிவிப்பு மூலம் ஓரிரு விடுதிகளில் புக்கிங் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பாஸ் அச்சிடுவது மற்றும் வழங்குவதில் உள்ள பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் விடுதியில் தங்குபவர்களுக்கு தரிசன நுழைவு சீட்டு வழங்கப்படுமா? அவ்வாறு வழங்கப்பட்டாலும் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு கோயில் உள்ளே சென்றுவிட முடியுமா? என்பது தீபத் திருவிழா நாளில் தெரியவரும்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், சிறப்பான வருவாயை ஈட்டி இருக்கின்றன. இதேபோல், வீடுகளும் தங்கும் விடுதிகளாக வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அவர்களும் மாத வாடகை தொகையை, 2 நாட்களுக்கான தொகையாக நிர்ணயித்து வசூலித்துள்ளனர். கட்டண உயர்வால் தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காமல் சாமானிய பக்தர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ‘ஆம்னி’ பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதனை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இதேபாணியில்தான், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தங்கும் விடுதிகளில் பேக்கேஜ் புக்கிங் முறை கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. விடுதி உரிமையாளர்கள் கேட்கும் கட்டணத்தை, வசதியானவர்கள் கொடுத்து விடுகின்றனர். பல நூறு கி.மீ., தொலைவு பயணம் செய்து வரும் நடுத்தர பக்தர்களாகிய, எங்களால் கொடுக்க முடியாது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தங்கும் விடுதி நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “தமிழகத்தில் அனைத்து வகையான வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டன. சொத்து வரி, குடிநீர் வரி தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. மேலும், மின்சார கட்டணமும் கடந்த 3 ஆண்டுகளில் 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுகிறது.
விடுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப சூழலுக்கு ஏற்ற வகையில் ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாக செலவு என்பது 2 மடங்காக உயர்ந்துள்ளன. இதுமட்டுமின்றி, கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும்போது, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அறைகளை புக்கிங் செய்கின்றனர்.
இதற்கான தொகையை ஈடு செய்யவும், பேக்கேஜ் முறை செயல்படுத்தப்படுகிறது. வசதியானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நடுத்தர குடும்ப பக்தர்களுக்கும் சிறிய விடுதிகளில், தினசரி வாடகை அடிப்படையில் அறைகள் வழங்கப்படுகின்றன. இக்கட்டணமும், விழா காலம் என்பதால் சற்று அதிகமாக இருக்கலாம்.
பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசன டிக்கெட் வழங்குவதாக கூறி யாரோ ஒருவர் புக்கிங் செய்வதாக கூறுகின்றனர். இதுகுறித்து எங்களுக்கு தெரியாது. அனைவரும் அவ்வாறு புக்கிங் செய்யவில்லை. அறைகளுக்கான கட்டணத்தை மட்டும் தெரிவித்து புக்கிங் செய்து வருகிறோம்” என்றனர்.