குமுளி: பம்பை நதியில் குளித்த பிறகு பக்தர்கள் ஈரத்துணியை அப்படியே விட்டுச் செல்வதால் சுகாதாரக்கேடும், மற்ற பக்தர்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் வழிபாட்டுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் புனித நீராடி பின்பு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக பம்பை நதிக்கரையில் உடைமாற்றுதல் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்புப் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு நீராடும் பக்தர்கள் பலரும் குளித்த தங்களன் துணியை அப்படியே ஆற்றில் விட்டு விடுகின்றனர். ஐயப்ப வழிபாட்டில் இப்படி ஒரு ஐதீகமே இல்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வேட்டி, துண்டுகள் ஆற்றில் சேகரமாகிறது. இது மற்ற பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதுடன், நதியின் புனிதத்தன்மையும் பாதிக்கிறது. இதுபோன்ற நிலையைத் தவிர்க்க திருவனந்தபுரம் ஹரிஹர கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் சார்பில் ஆடைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏராளமான ஊழியர்கள் துணிகளை பம்பை நதியில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்த மண்டல கால பூஜையின் முதல் 10நாட்களில் மட்டும் 5டன் ஆடைகள் அகற்றப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், நதியில் ஈரத்துணியை விட்டுச் செல்வது வழிபாட்டில் இல்லாத ஒரு பழக்கம். இருப்பினும் தமிழ்நாடு,தெலுங்கானா, ஆந்திரா பக்தகர்களிடம் இதுபோன்ற நிலை உள்ளது. இது குறித்து ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நதிக்கரையிலும் இது குறித்த அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆகவே பக்தர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இது குறித்து அண்டைமாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.