‘முன்பதிவு செய்தவர்களில் தினமும் 15,000 பேர் சபரிமலைக்கு வருவதில்லை’ - தேவசம் போர்டு தகவல்


பம்பை நதியில் நேற்று காலை நீராடிய ஐயப்ப பக்தர்கள்.

தேனி: சபரிமலைக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 10 முதல் 15 ஆயிரம் பேர் வரை தரிசனத்துக்கு வருவதில்லை என தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார். சபரிமலையில் கடந்த 16-ம் தேதி மண்டல கால வழிபாடுகள் தொடங்கின. தொடக்கத்தில் குறைவாக இருந்த பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

இணையதளம் மூலம் தினமும் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஞாயிறு) வரை முதல் 9 நாட்களில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 290 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 84 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு வந்தனர். பல்வேறு துறைகள் சார்பில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ஆன்லைன் முன்பதிவு எண் ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் தற்போது இல்லை. பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்ய கூடுதல் கவுன்ட்டர் திறக்கப்பட உள்ளது. இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் வர முடியா விட்டால், அதை ரத்துசெய்ய வேண்டும்.

இதுகுறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஆனால், பலரும் அதை ரத்து செய்வதில்லை. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு வருவதில்லை. இதை திட்டமிட்டு யாராவது செய் கிறார்களா என்று தெரியவில்லை.

இதனை ஈடுகட்டும் வகையில் ஸ்பாட் புக்கிங் மூலம் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்து வருகின்றனர். 18-ம் படியில் போலீஸாரின் பணி நேரம் 20 நிமிடமாக இருந்த போது கடைசி 5 நிமிடத்தில் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு பக்தர்களை படியேற்றும் வேகம் குறைந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களின் பணி நேரம் 15 நிமிடமாக குறைக்கப் பட்டது. இதனால் நிமிடத்துக்கு 80 பக்தர்கள் 18-ம் படியில் தற்போது ஏறிச் சென்று கொண்டி ருக்கின்றனர் என்று கூறினார்.

x