தேனி: சத்திரம் வனப்பகுதியில் தங்கும் ஐயப்ப பக்தர்களுக்காக, பனி மற்றும் விஷ ஜந்துகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பு குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழக-கேரள எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, எருமேலி வழியாக பம்பைக்கு வாகனங்களில் செல்லலாம். மேலும், பாத யாத்திரையாகச் செல்பவர்கள் வண்டிப் பெரியாறில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள சத்திரத்தை அடைந்து, அங்கிருந்து புல்மேடு வனப் பாதை வழியாக 12 கி.மீ. நடந்து சென்று சந்நிதானத்தை அடையலாம். இது வனப் பாதை என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தற்போது, தினமும் சராசரியாக 500 பக்தர்கள் வனப்பாதை வழியாக சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். சில வாரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விடும். எனவே, இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மதியம் 2 மணிக்குப் பிறகு இந்த வனப் பாதையில் செல்ல அனுமதி இல்லாததால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்தப் பகுதியிலேயே தங்கி விடுவர். இவர்கள் இலவசமாக தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வனப் பகுதி என்பதால் இங்கு பனியின் தாக்கமும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்யும். எனவே, இவற்றை எதிர்கொள்ளும் வகையில், பனி தாக்காத குடில்கள் 3 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
தரையில் ஈரத்தின் தாக்கம் மற்றும் விஷ ஜந்துகளின் ஊடுருவல் இருக்கும் என்பதால், நிலத்தில் இருந்து 3 அடி உயரத்தில் மரத்திலான படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 200 பேர் வரை தங்க முடியும். அதேபோல, தற்காலிக கழிப்பிடங்கள், குளியலறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சில தினங்களில் இப்பணிகள் முடிந்து, பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது இவை தயாராக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வண்டிப்பெரியாறு தேவசம் போர்டு சிறப்பு அதிகாரி ராஜேஷ் கூறும்போது, பக்தர்கள் இங்கு சிரமமின்றி தங்கவும், அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் பக்தர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இருமுடிகள், சுமைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும், இப்பகுதியில் தனியார் மூலம் ரூ.100 கட்டணத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன.