திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் தொடங்கியுள்ளதால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில பக்தர்களும் சபரிமலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் தரிசனம் செய்ய வருகின்றனர். நேற்று ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்திருந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரோப் கார், வின்ச் ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்றனர். மலைக் கோயிலில் கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசையில் 2 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி கிரிவீதி, சந்நிதி வீதி, இட்டேரி சாலை, பூங்கா ரோட்டில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 2 சுற்றுலா பேருந்து நிலையமும் ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனங்களால் நிரம்பியிருந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்காக சுற்றுலா பேருந்து நிலையம், தண்டாயுதபாணி நிலையத்தின் வெளிப்பகுதியில் புதிதாக பஞ்சாமிர்தம் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.