ஞாபசக்தி பிரச்சினை, நினைவு தடுமாற்றம் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு சபரிமலையில் வழிகாட்டி கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது. வழி தவறியவர்களை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் எளிதாக ஒப்படைக்க முடியும் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல பூஜை வழிபாட்டுக்காக கடந்த 15-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். நெரிசலைக் குறைப்பதற்காக தினமும் 18 மணி நேரம் நடை திறக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதிகபட்சமாக தினமும் 80ஆயிரம் பேர் வரை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பக்தர்களைப் பாதுகாக்கவும், வழிநடத்தவும் பல்வேறு ஏற்பாடுகள் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வழிதவறும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. இதில் பலரும் பெரியவர்கள் என்பதால் செல்எண் மூலம் தங்கள் குழுவினரை தேடிக் கண்டறிந்து இணைந்து கொள்கின்றனர். அல்லது அருகில் உள்ள உதவி மையத்தை நாடி, அறிவிப்புகள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.
ஆனால், குழந்தைகள், முதியவர்கள் வழிதவறும்போது, கண்டுபிடிப்பதில் சிரமங்கள் உள்ளன. பல குழந்தைகளால் உரிய பதில் கூற முடிவதில்லை. இதனால் பெற்றோர் மற்றும் குழுவினர் அவர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்காக, பக்தர்களுடன் வரும் குழந்தைகளுக்கு மணிக்கட்டில் வழிகாட்டி பட்டை அணிவிக்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயர், பெற்றோரின் செல்போன் எண் அழியா மையால் எழுதப்படுகிறது.
இதனால் குழந்தைகள் வழிதவறினாலும், இதைப் பார்க்கும் ஐயப்ப பக்தர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்ள முடியும். மேலும், உதவி மையத்தில் ஒப்படைத்தால், அங்குள்ள அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்க்கவும் உறுதுணையாக இருக்கும்.
தற்போது 10 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், பம்பையில் கேரள போலீஸார் சார்பில் இந்த கைப்பட்டை அணிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், நினைவு தடுமாற்றம் உள்ள முதியோர், ஞாபகசக்தி பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த பட்டை அணிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறும்போது, "குழந்தைகள் மட்டுமின்றி, முதியோர்களும் சில நேரங்களில் வழிதவறி விடுகின்றனர். முதுமை காரணமாகவும், பிராந்திய மொழி மட்டுமே அவர்களுக்குத் தெரிவதாலும் பதற்றம் அடைந்து விடுகின்றனர். சபரிமலையில் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிக்னல்களும் கிடைப்பதில்லை. எனவே, தேவைப்படுவோரின் விருப்பம் அறிந்து, முதியோர்களுக்கும் கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, உதவி மையத்தின் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும் முடியும்" என்றனர்.