மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே, பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது. இதன் அருகே நகரப் பேருந்து நிலையத்தையொட்டிவாறு, இக்கோயிலின் உப கோயிலான சந்தான வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று (நவ.19) தொடங்கியது. நேற்று மாலை தேவதா அனுக்ஞை, விஸ்வக்சேன ஆராதனம், மஹா சங்கல்பம், வாசுதேவ புண்யாகம், தன பூஜை, வாஸ்து பூஜை சாற்றுமுறையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, இன்று (நவ.20) காலை திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, திவ்ய பிரபந்த சேவை, வேத பாராயண சேவை, இரண்டாம் கால யாகம் ஆகியவை தொடங்கி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கும்ப உத்தாபணம், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி, புனித நதிகளில் இருந்து எடுத்துவரப் பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கோயிலை சுற்றிலும் எடுத்துவரப்பட்டது. பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி திருக்கோயில் அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கலச கோபுரத்தில் இருந்து சுற்றி நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் சந்திரமதி, மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.