சபரிமலை கோயிலில் மண்டல பூஜை தொடங்கியது: 30 ஆயிரம் பேர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்


சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று இரவு சுவாமி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

சபரிமலை: சபரிமலை ஜயப்பன் கோயிலில் மண்டல பூஜை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 30 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜையின் முதல் நாளான நேற்று கோயில் நடையை அருண்குமார் நம்பூதிரி அதிகாலை 3 மணிக்குத் திறந்தார்.

சூரிய உதயத்துக்கு முன்பு செய்யப்படும் உஷபூஜையை தந்திரி கண்டரரு ராஜீவரு மேற்கொண்டார். தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

நேற்று மாலை சாரல் மழை பெய்தபோதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 11 மணிக்கு ஹரிவராசனத்துடன் கோயில் நடை சாத்தப்பட்டது. மண்டல பூஜை காலத்தில் ஒவ்வொரு நாளும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று ஸ்ரீ சாஸ்தா கலையரங்கத்தில் `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' அறக்கட்டளை சார்பில் பஜனை நடைபெற்றது.

மருத்துவ சிகிச்சை மையம்: இதனிடையே, கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக இலவச மருத்துவ சிகிச்சை மையத்தை தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "125 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இங்கு முகாமிட்டு, 24 மணி நேரமும் சேவை செய்து வருகின்றனர். பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று (நேற்று) 30 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் 26,942 பேர் முன்பதிவு செய்து வந்திருந்தனர்" என்று கூறினார்.

x