குமுளி: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும், அவசரகால தொடர்புக்காகவும் சபரிமலையில் பிஎஸ்என்எல். சார்பில் இலவச வைஃபை வசதி நேற்று தொடங்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். சபரிமலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால், தொலைத்தொடர்பு சிக்னலில் தடை ஏற்படுவது வழக்கம். இதனால், தங்களுடன் வந்தவர்களை தொடர்பு கொள்வதிலும், அவசரகால தொடர்புகளிலும் பக்தர்களுக்கு சிக்கல் ஏற்படுவது உண்டு.
இதை தவிர்க்கும் வகையில் தேவசம்போர்டுடன் இணைந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த வசதியை தொடங்கியுள்ளது. தேவசம்போர்டு துறை அமைச்சர் வி.என்.வாசவன் பம்பையில் இலவச வைஃபை வசதியை நேற்று தொடங்கிவைத்தார். தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர் கே.ஜோதிஷ்குமார், இணை இயக்குநர் அபிலாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதன்படி ஒரு சிம்முக்கு அரை மணி நேரம் இந்த வசதியைப் பெறலாம்.
இதற்காக நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 48 இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் சபரிமலை அலுவலகப் பொறுப்பாளர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். இதுதவிர, சபரிமலை வழித்தடத்தில் பிஎஸ்என்எல் சார்பில் புதியதாக 4-ஜிடவர்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
வைஃபை வசதி பெறுவது எப்படி? - பிஎஸ்என்எல்லின் வைஃபை சேவையைப் பெற முதலில் போனில் உள்ள வைஃபை ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். பின்னர், திரையில் காட்டப்படும் பிஎஸ்என்எல் வைஃபை அல்லது பிஎஸ்என்எல்.பிஎம்வாணி எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் திறக்கப்படும் வலைப்பக்கத்தில், பத்து இலக்க செல்போன் எண்ணைத் தட்டச்சு செய்யவேண்டும். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட செல்போனுக்கு 6 இலக்க எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதை உள்ளீடு செய்ததும் வைஃபை சேவை தொடங்கும். இதற்காக சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் 300 எம்பிபிஎஸ் அப்லிங்க் வேகத்துக்காக ஆப்டிக்கல் ஃபைபர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேர தகவல் மையம்: தமிழக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு ஜோதியை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழக பக்தர் களுக்கு உதவுவதற்காக, அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஜன. 24-ம் தேதி வரை செயல்படும். தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தகவல் மையச் சேவையை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 04428339999 மற்றும் 18004251757 ஆகியவற்றில் அழைத்து, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.