மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் தென் திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில், ஐப்பசி மாத திருவோணத்தை முன்னிட்டு பெருமாளுக்கு புஷ்ப யாக வைபவ நிகழ்ச்சி இன்று (நவ.09) வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, இந்நிகழ்ச்சியையொட்டி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம் பூஜைகள் தொடங்கி, விஸ்வரூப தரிசனம், புண்ணியாக வாசனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயில் முன் மண்டபத்தில், மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, மலையப்பசாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு புஷ்பாஞ்சலி வைபவம் நடைபெற்றது. செண்பகம், தாழம்பூ, தாமரை, அரளி, செவ்வந்தி, சாமந்தி, ரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட 51- க்கும் மேற்பட்ட வகையிலான மலர்களை கொண்டு பெருமாளுக்கு, வேத மந்திரங்கள் ஓதி புஷ்பாஞ்சலி நடத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களுக்கு நடுவே அருள்பாலித்த மலையப்ப சுவாமியை வணங்கி அருளாசி பெற்றுச் சென்றனர்.