அண்ணாமலையார் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்


திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற `மகா ரதம்' தேர் வெள்ளோட்டம். படம்: இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட `மகா ரதம்' தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலையில் நடைபெறும் அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா மகா தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் மாட வீதியில் வலம் வருவர். ஒவ்வொரு தேரும் நிலையை வந்தடைந்த பிறகே அடுத்த தேர் புறப்படும்.

நடப்பாண்டு மகா தேரோட்டம் வரும் டிச. 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பஞ்ச ரதங்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், ரூ.70 லட்சத்தில் மகா ரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர் புதுப்பிக்கப்பட்டது. இது 59 அடி உயரமும், 200 டன் எடை கொண்டது.

இதையடுத்து, அண்ணாமலையாரின் மகா ரதம் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. சிவகைலாய வாத்தியம், சிவனடியார்களின் சங்கு நாதம் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கினர். தொடர்ந்து, `அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்கதர்களின் முழக்கத்துக்கிடையே மகா ரதம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, மாட வீதியில் தேர் வலம் வந்தது. ஏறத்தாழ 4 மணி நேரம் மகா ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

x