கோவை: கந்தசஷ்டியை ஒட்டி, மருதமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வு இன்று (நவ.8) நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மருதமலை முருகன் கோயிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண விழா கடந்த 2-ம் தேதி காலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ‘கங்கனம்’ கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். பின்னர், அன்றைய தினத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, சுவாமி திருவீதி உலா ஆகியவை நடந்தது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரசம்ஹார நிகழ்ச்சி வியாழக்கிழமை (நவ.07) நடந்தது. அதனைத் தொடர்ந்து, திருக்கல்யாண விழாவும் நடந்தது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டது. யாகசாலையில் உள்ள கலசங்களில் இருக்கும் தீர்த்தங்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி கோயிலைச் சுற்றி திருவீதி உலா வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா’, ‘முருகனுக்கு அரோகரா’ என பக்தி கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.