கந்த சஷ்டி விழா நிறைவாக சென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்


திருக்கல்யாண உற்சவம்

ஈரோடு: கந்த சஷ்டி விழா நிறைவையடுத்து, சென்னிமலை, திண்டல் முருகன் கோயில்களில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய, சென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா, நேற்று இரவு, சூரசம்ஹார நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கந்த சஷ்டி விழா நிறைவை ஒட்டி, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், காப்பு கயிறுகளை அகற்றி விரதத்தை முடித்து கொண்டனர். சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலின் தலைமை குருக்கள் ராமநாதசிவம் பக்தர்களின் கைகளில் இருந்து காப்புகளை அகற்றினார். ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவை ஒட்டி, நேற்று பக்தர்கள் பால்குட ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து பால் அபிஷேகமும் நடந்தது. இரவு நடந்த சூரசம்ஹார நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கந்த சஷ்டி விழா நிறைவாக, திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில், இன்று, வள்ளி, தெய்வானையுடன் சமேத வேலாயுதசாமியின் உற்சவ சிலைகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் கோயில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, வேலாயுதசுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தாக அன்னதானம் வழங்கப்பட்டது.
*

x