மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் உற்சவத்தின் 9-ம் நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் பிரசித்திபெற்ற தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் பூதத்தாழ்வார் உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான பூதத்தாழ்வார் உற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒன்பதாம் நாளான இன்று காலை திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில், பூதத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து, ராஜவீதிகளின் வீதிகளின் வழியாக திருத்தேர் வீதியுலா வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில் சமபோஜனம் முறையில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.