கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: கடற்கரையில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்


நிகழ்ச்சியைக் காணத் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள். படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயிலில் கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டு, தங்க ரதத்தில் சுவாமி கிரி வீதியுலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் பூர்ணாஹுதியைத் தொடர்ந்து, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

பின்னர், தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, பக்தர்கள் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட சண்முகவிலாசம் சென்றடைந்தார். பிற்பகலில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மாலை 4.15 மணியளவில் ஜெயந்திநாதர் போர்க்கோலம் பூண்டு, சஷ்டி மண்டபத்திலிருந்து புறப்பட்டு கடற்கரைக்குச் சென்றார். முன்னதாக, சிவன் கோயிலில் இருந்து சூரபத்மன் கடற்கரைக்கு பரிவாரங்களுடன் வந்தார். முதலில் கஜ முகத்துடன் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்த ஜெயந்திநாதர், தொடர்ந்து சிங்க முகத்துடன் வந்த சூரபத்மனை வதம் செய்தார். இறுதியாக சுயரூபத்துடன் போரிட்ட சூரனை வதம் செய்தபோது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்று முழக்கமிட்டு, பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மா மரமாக உருக்கொண்ட சூரபத்மனை, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர். தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர், பின்னர் பூஞ்சப்பரத்தில் கிரி பிரகாரம் உலா வந்து கோயிலை அடைந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.

கந்தசஷ்டி விழாவின் 7-ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் திருக்காட்சி கொடுத்த பின்னர் தெற்கு ரதவீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்கபெருமான்-தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது

x