ஈரோடு: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சிறப்பு வாய்ந்த, சென்னிமலை முருகன் கோயிலில், சூரசம்ஹார விழா, பக்தர்கள் வெள்ளத்தில் விமர்சையாக நடந்தது.
சென்னிமலை முருகன் கோயில் கடந்த 2-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதனை ஒட்டி, மலைக்கோயிலில் கடந்த 6 நாட்களாக உற்சவர் மற்றும் மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை ஆகியவை நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவை ஒட்டி, மாலை 4 மணியளவில், மலைக்கோவிலில் இருந்து உற்சவமூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். முருகப்பெருமானின் போர்ப்படை தளபதி வீரபாகு, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முன் செல்ல, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்ய புறப்பட்டார்.
முதலில், மேற்கு ராஜ வீதியில் யானைமுகன் உருவத்தில் வந்த சூரனின் தலையை வதம் செய்த முருகப் பெருமான், வடக்கு ராஜ வீதியில் நடைபெற்ற போரில், சிங்கமுக சூரனையும், கிழக்கு ராஜ வீதியில் நடைபெற்ற போரில் வானுகோபன் சூரனையும் வதம் செய்தார். இறுதியாக தெற்கு ராஜ வீதியில் சூரபத்மனின் தலையை தன்னுடைய வேலால் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார்.
சூரசம்ஹார நிகழ்வின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ’அரோகரா’ கோஷம் எழுப்பி வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (8-ம் தேதி) காலை 9 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில், வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டல் முருகன் கோயில்: திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். கோயில் வளாகத்தில் இன்று மாலை திரண்டிருந்த பக்தர்களின் கரகோஷத்திற்கிடையே முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார். இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹோமம், அபிஷேக ஆராதனையுடன் சூரசம்ஹார விழா காலை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பச்சமலை கோயிலில் இருந்து தொடங்கிய சுவாமி ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக, பாரியூர் பிரிவு பகுதிக்கு வந்து சேர்ந்து. அங்கு நடந்த சூரசம்ஹார நிகழ்வில், முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.