கோவை: மருதமலை முருகன் கோயிலில் இன்று (நவ.7) நடந்த சூரசம்ஹார நிகழ்வில், சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்தார். கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காலை விநாயகர் பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து அன்றைய தினம் முதல் இன்று வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, சுவாமி திருவீதி உலா ஆகியவை நடத்தப்பட்டது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று (நவ.7) நடைபெற்றது.
இதையொட்டி, இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி அம்பாளிடம் இருந்து வேல் ஆயுதத்தை பெற்றுக் கொண்டு ஆட்டுக் கிடா வாகனத்தில் கோயிலின் முன்புறம் எழுந்தருளினார். வீர பாகு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இருவரும் கோயிலை சுற்றி வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து முருகப் பெருமான் முதலில் தாராக சுரனை வதம் செய்தார்.
இரண்டாவதாக பானுகோபனை வதம் செய்தார். மூன்றாவதாக சிங்க முகாசூரனை வதம் செய்தார். 4-வதாக சூரபத்மனை தனது வேலால் முருகப்பெருமான் வதம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். கந்த சஷ்டி விழாவையொட்டி மருதமலை அடிவார நுழைவாயிலில் இருந்து அடிவாரப் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், மலை மீது கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சூரசம்ஹாரம் செய்த சுவாமிக்கு கோபத்தை தணிக்கும் வகையில் மகா அபிகேஷகம் நடத்தப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் தங்க கவசத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாராதனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
சூர சம்ஹாரத்தை தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் முருகப் பெருமாள், வள்ளி, தெய்வானையுடன் கோயிலை சுற்றி வலம் வந்தனர். கந்த சஷ்டி விழாவின் 7ம் நாள் நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வு நாளை (நவ.8) நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி மருதமலை பகுதியில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.