நாகப்பட்டினம்: கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலய திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் குமரேசன் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோயில் புகழ்பெற்ற முருகன் திருத்தலமாகும். சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சூரனை முருகன் வதம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய புராண, வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலில் சூரசம்ஹார விழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி, இன்று காலை முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் குமரேசன் தேரோட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க கோயிலின் நான்கு ரத வீதிகளில் திருத்தேர் வலம் வந்து தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் நாகை, கீழ்வேளுர், சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிற்பகலில் தேர் நிலைக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சூரனை சம்ஹாரம் செய்ய சிங்காரவேலவர் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
அது சமயம், சிங்காரவேலவருக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தும் அரிய நிகழ்வு நடப்பது வழக்கம். வெறெங்கும் காண முடியாத இந்த அரிய காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சிக்கலில் கூடியுள்ளனர். இவ்விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.