தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவுக்கு வரும் பக்தர்கள் காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அத்தியாவசிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் கியூஆர் கோடு வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மறுதினம் (நவ.7) நடைபெறுகிறது. தொடர்ந்து 8ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கழிப்பறைகள், பொதுமக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப் பாதைகள் மற்றும் வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூஆர் கோடு (QR CODE) மற்றும் லிங்க் (Link) வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
https://bit.ly/E-Support-Hub_Skanda-Sashti-2024 என்ற லிங்க் அல்லது கியூஆர் கோடு மூலம் அதிலுள்ள இணையதள பக்கத்துக்குள் சென்று மேற்படி அத்தியாவசியத் தகவல்களைக் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொண்டு பயன்பெறலாம்" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.