தில்லை கோவிந்தராஜர் கோயிலில் கொடிமரத்துக்கு பாலாலயம் செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு


கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி கொடிமரம் அருகே வாக்குவாதம் செய்த தீட்சிதர்கள்.

சென்னை / கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில் பழைய கொடிமரத்தை அகற்றி, புதிய கொடிமரம் அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தில்லை கோவி்ந்தராஜர் கோயில் பக்தரான ஹரிஹரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில் உள்ள பழைய கொடிமரத்தை அகற்றி விட்டு, வேறு இடத்தில் புதிதாக கொடிமரம் அமைக்க அறநிலையத் துறை ஆணையர் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கோயில் கொடிமரம் தொடர்பாக சைவ - வைணவ பிரிவினருக்கிடையே 1860-ம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்டு, பின்னர் இது தொடர்பான வழக்கில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. அதன்படி கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்வது, கொடிமரத்துக்கு பூஜையோ, கோயிலில் பிரம்மோற்சவவிழாவோ நடத்தக்கூடாது என சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி கடந்த 160 ஆண்டுகளாக அந்த கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போதுள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு, புதிதாக கொடிமரம் அமைப்பது என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமின்றி சடங்கு சம்பிரதாயங்களுக்கும் எதிரானது. எனவே தில்லை கோவிந்தராஜர் கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். அத்துடன் அந்த திட்டத்தை கைவிடவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இருதரப்பினரும் வாக்குவாதம் இந்நிலையில், கொடிமரத்தை மாற்றி அமைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள் கொடிமரத்துக்கு பாலாலயம் செய்தனர். அப்போது அங்கிருந்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள், “கோயில் கொடி மரத்தை மாற்றக்கூடாது. பிரமோற்சவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் எந்த பணியும் செய்யக்கூடாது” என்று கூறி கொடிமரத்தை சுற்றி நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நேற்று, கடலூர் மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், துணை ஆணையர் சந்திரன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், தில்லை கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் உள்ள கொடி மரத்தை மாற்றுவதற்காக வந்தனர். அப்போது தீட்சிதர்கள், தாங்கள் இதுகுறித்து சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு இன்று (நவ.4) விசாரணைக்கு வந்துள்ளதாகவும், தீர்ப்பு வந்ததும் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ‘‘15 நாட்களுக்கு கொடிமரம் அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது. தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். இந்த தகவல், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நடராஜர் கோயில் வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

x