திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் இன்று (நவம்பர் 4-ம் தேதி) மாலை நடைபெற்றது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். ஒவ்வொரு துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,"திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆய்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டன. டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றப்பட உள்ளன. டிசம்பர் 10ம் தேதி மகா தேரோட்டமும், டிசம்பர் 13ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன.
கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும். கோயில் உள்ளே பரணி தீபத்துக்கு 7,500 பக்தர்களும், மகா தீபத்துக்கு 11,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க 2 ஆயிரம் பக்தர்களுக்கு, மலையேற அனுமதிக்கப் படுவார்கள். அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும். உடல் பரிசோதனை அடிப்படையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் என பரணி தீபத்துக்கு 5,200 பேரும், மகா தீபத்துக்கு 8 ஆயிரம் பேர் அனுமதிக்கப் படுவார்கள். கோயில் உள் பகுதியில் தேவையான இடத்தில் மட்டும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அண்ணாமலையார் கோயிலில் இருதய மருத்துவர் அடங்கிய 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். மொத்தம் 85 மருத்துவக் குழுக்கள் பணியில் இருப்பார்கள். அண்ணாமலையார் தேர் வெள்ளோட்டம் மற்றும் மகா தேரோட்டத்தின் போது மாட வீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
தங்கும் விடுதிகளில் வழக்கமான கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூல் செய்வது குறித்து புகார் அளித்த நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயிக்கப்பட்டதை விட ஆட்டோவில் கட்டணம் வசூல் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் பரணி தீபத்துக்கு 500 டிக்கெட்களும், மகா தீபத்துக்கு ஆயிரத்து 100 டிக்கெட்களும் விற்பனை செய்யப்படும்" என்றார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்.