ஈரோடு: தாளவாடி அருகே கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நடந்த சாணியடித் திருவிழாவில், தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மேல் ஒருவர் மாட்டுச்சாணத்தை பூசிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதற்கென சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால்நடைகளின் சாணம், கோயிலின் பின்பகுதியில் நேற்று முன் தினம் குவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை கோயிலுக்கு அருகில் உள்ள குளத்துக்கு, பீரேஸ்வரரை ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள் நீராடச் செய்தனர். அதன்பின்னர், கழுதை மேல் வைத்து சுவாமியை கோயிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணத்தை உருண்டையாக உருட்டி, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் பூசியும், வீசியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சாணியடி நிகழ்வுக்குப்பிறகு, அருகில் உள்ள குளத்தில் குளித்து விட்டு பக்தர்கள், பீரேஸ்வரரை வழிபட்டனர்.
இந்த வழிபாட்டால், ஊர்மக்கள், கால்நடைகள் நலம்பெறுவதுடன், விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பதும், சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் உடலிலுள்ள நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருவிழாவில், தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.