மதுரை: மதுரை அழகர்கோயில் மலையிலுள்ள சோலைமலை முருகன் கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அழகர்கோயில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை 7 மணி அளவில் விக்னேஷ்வர பூஜை, யாக சாலை பூஜையுடன் காப்பு கட்டுதல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். பின்னர் 10 மணியளவில் சண்முகர் அர்ச்சனையும், மஹா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர், அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
தினமும் யாகசாலை பூஜை, சண்முகர் அர்ச்சனை, வாகன புறப்பாடு நடைபெறும். அதன்படி நவ.3-ல் காமதேனு வாகன புறப்பாடு, நவ.4-ல் யானை வாகனம், நவ.5-ல் ஆட்டுக்கிடாய் வாகனம், நவ.6-ல் சப்பர வாகன புறப்பாடும் நடைபெறும். முக்கிய விழாவான நவ.7-ல் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு காலை 11 மணியளவில் குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும்.
மாலை 4 மணியளவில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.15 மணியளவில் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடாகி கோயிலின் ஈசான திக்கில் ஈசான திக்கில் கஜமுக சூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் மாலை 5 மணிக்கு சம்ஹாரம் செய்து தல விருட்சம் நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்து சூரசம்ஹாரம் நடைபெறும். நவ.8-ல் காலை 10.15 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
காலை 11.30 மணியளவில் அன்ன பாவாடை தரிசனம், தீபாராதனை, பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடன், திருவிழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் க,செல்லத்துரை, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.