திருப்போரூர் கந்தசுவாமி கோயில்: கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ் பெற்ற முருகப்பெருமான் ஆலயங்களுள் ஒன்றான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா இன்று 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பல்லக்கு உற்சவம் நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடக்கிறது. நாளை 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும், 4ம் தேதி திங்கட்கிழமை இரவு புருஷா மிருக வாகனத்திலும், 5ம் தேதி இரவு பூத வாகனத்திலும், 6ம் தேதி இரவு வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்யும் கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முருகப்பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார்.

அன்று இரவு தங்க மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலா நடைபெறுகிறது. மறுநாள் 8ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. கந்தசஷ்டியையொட்டி தினமும் கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். கந்த சஷ்டி விழா தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலையினை அணிந்து கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கி கோவில் வளாகத்தில் 108 சுற்றுக்கள் சுற்றி வலம் வந்தனர்.

x