கணவன் - மனைவி ஒற்றுமைக்கான கவுரி விரதம்: மதுரையில் பூஜை பொருட்கள் வாங்க திரண்ட பெண்கள்


மதுரை: மதுரையில் கணவன், மனைவி ஒற்றுமைக்கான கவுரி விரதம் (நோன்பு) மேற்கொள்ளும் பெண்கள் கீழமாசி வீதியில் மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பூஜை பொருட்களை வாங்க திரண்டனர்.

திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் வேண்டியும், சுமங்கலிகள் தனது கணவருடன் இணை பிரியாது ஒற்றுமைக்காக இருக்க வேண்டியும் கேதார கவுரி விரதம் மேற்கொள்வது வழக்கம். தீபாவளியொட்டி, ஐப்பசி அமாவாசை நாளான நேற்று பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டனர். இதற்கான பூஜைக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க கீழமாசி வீதி, தேடிமுட்டி பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டனர்.

அவர்கள் சுளகு (காதோலை) முனை முறியாத மஞ்சள், வெற்றிலை, ஊமைப்பாக்கு, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப் பழம், அதிரசம், எலுமிச்சை பழம் , நோன்புக் கயிறு சார்த்தி, தேங்காய், கருகு மணி, கண்ணாடி மற்றும் பூக்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக கீழமாசி வீதியில் காலை முதலே விறுவிறுப்பாக நடந்தது.

இவ்விரதம் குறித்து பெண்கள் கூறுகையில், ‘இந்த விரதம் 21 நாளும் இருக்கலாம். சில பெண்கள் ஒரு நாள் விரதம் இருந்து 21 நாட்களை கணக்கிட்டு 21 பொருட்களை சமர்ப்பணம் செய்து எலுமிச்சம் பழம் , நோன்புக் கயிறு சார்த்தி, தேங்காய், கருகுமணி , காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து பிரசாதமாக 21 அதிரசம், அப்பம் அல்லது சியம் ,வடை முதலியன நைவேத்தியமாக தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக் கயிறை கையில் கட்டிக்கொள்வர்.

இதனை சிலர் வீடுகளிலேயே கலசம் நிறுத்தி இப் பூஜையை மேற்கொள்வர். சிலர் பூஜைக்கான எல்லா வேலைகளையும் செய்து விட்டு பூஜை பொருட்கள் மற்றும் விரத கயிறை கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கு பூஜித்து வீட்டுக்குக் கொண்டு வருவர். இந்த விரத நாளில் ஈஸ்வரனை வழிபட்டு சுமங்கலிப் பெண்கள் தங்களது கணவருடன் ஒற்றுமையாக இருப்பதும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதால் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் ‘ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்ற மந்திரம் ஓதியபடி மாலை பிரதோஷ காலத்தில் விரதத்தை முடிப்பார்கள், என்று பெண்கள் கூறினர்.

x