திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் 11-ம் நாளான இன்று சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் டவுன் காட்சி மண்டபத்தில், காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மேலும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 11ம் நாளான இன்று நண்பகல் 12 மணியளவில் டவுண் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் ரத வீதி வலம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் நாளை அதிகாலையில் அம்பாள் சந்திநிதி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுகிறது.
தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. வரும் நவம்பர் 1ம் தேதி இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டின பிரவேசம் வீதியுலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.