சேதமான ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்


பழநி: பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான டகோரம் சீரமைக்கப்பட்டு நேற்று இலகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகளேயான நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ராஜகோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதி (டகோரம்) உடைந்து சேதமடைந்தது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பரிகார பூஜை செய்து கோபுரத்தை சீரமைக்கவும், சிறிய அளவில் கும்பாபிஷேகம் நடத்தவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த சில தினங்களாக ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான டகோரம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, நேற்று முன்தினம் முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 4-ம் கால வேள்வி முடிந்து, யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலைச் சுற்றி வந்தனர். காலை 5.30 மணிக்கு ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றி இலகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோபுர சீரமைக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

x