கரூர்: தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.
கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழா அக். 1 ஆம் தேதி தொடங்கி அக். 23 ஆம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறுகின்றன. அக். 4 ஆம் தேதி திருக்கொடியேற்றம், அக். 10 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. புரட்டாசி 4வது மற்றும் கடைசி சனிக்கிழமையான இன்று (அக். 12ம் தேதி) விழாவின் உச்ச நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சீதேவி, பூதேவியுடனான கல்யாண வெங்கடரமண சுவாமி உற்சவர் அதிகாலை திருத்தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து திருத்தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி வலம் வந்தது. தேரோட்டத்தையொட்டி கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கரூர் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடைசி சனிக்கிழமை மற்றும் தேரோட்டம் காரணமாக அதிகளவிலான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
அக். 15, அக். 17, அக். 20 ஆம் தேதிகளில் வெள்ளி கருட வாகனம், அக். 19 ஆம் தேதிகளில் வெள்ளி அனுமார் வாகனம், அக். 21 முத்துப்பல்லாக்கு, அக். 22 ஆளும் பல்லாக்கு, அக். 23 வண்ணப் பூக்களால் வேள்வியுடன் விழா நிறைவு பெறுகிறது. நாள்தோறும் காலை 8 மணிக்கு பல்லாக்கு, இரவு 7 மணிக்கு வாகன புறப்பாடு நடைபெறுகிறது. செப். 21, 28, அக். 5 ஆம் தேதி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.