வளர்பிறை அஷ்டமி: கரூரில் களைகட்டியது எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா


கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழாவில் எறிபத்த நாயனார் மழுவால் யானையை துதிக்கும் காட்சி சித்தரிக்கப்படுகிறது.| படங்கள்: க.ராதாகிருஷ்ணன்.

கரூர்: கரூரில் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா இன்று நடைபெற்றது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தினமான இன்று பூக்குடலை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆநிலையப்பர், உமா மகேஸ்வரர், பைரவர், சிவகாமி ஆண்டார், எறிபத்த நாயனார், புகழ்சோழர் ஆகியோருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு சிவனடியார்கள் எறிபத்த நாயனார், சிவகாமி ஆண்டார், புகழ்சோழர், பாகன், படைவீரர்கள் வேடமிட்டிருந்தனர். கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே சிவகாமி ஆண்டார், எறிபத்த நாயனார், புகழ்சோழர் உற்சவமூர்த்திகள் கொண்டு வரப்பட்டன.

கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழாவில் எறிபத்த நாயனார் மழுவால் யானை, படைவீரர்களை துணித்த காட்சி சித்தரிக்கப்படுகிறது.

சிவகாமி ஆண்டார் வேடமிட்டவர் பூக்குடலையுடன் ஆநிலையப்பர் கோயில் நோக்கி வருதல், மர யானையை பக்தர்கள் இழுத்து வந்து சிவகாமி ஆண்டார் வேடமிட்ட சிவனடியார் கையில் உள்ள பூக்குடலையை தட்டிவிடும் காட்சி, எறிபத்த நாயனார் யானையின் துதிக்கையை துணித்தல், அத்துடன் பாகன், படைவீரர்களை துணித்தல், புகழ்சோழர் வேடமிட்டவர் எறிபத்த நாயனாரிடம் தனது வாளை வழங்கி தண்டிக்கக் கோருதல், வானில் அசரீரி ஒலித்தல், உமாமகேஸ்வரர் தோன்றி அனைவரையும் உயிர்ப்பித்தல் உள்ளிட்டவை காட்சிகளாக சித்தரிக்கப்பட்டன.

கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழாவில் எறிபத்த நாயனாரிடம், புகழ்ச்சோழ மன்னர் வாளை வழங்கி தண்டிக்கக் கோரும் காட்சி சித்தரிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பூக்குடலைகளுடன் பங்கேற்றனர். திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் நிகழ்ச்சியை வர்ணனை செய்தார். பூக்குடலை நிகழ்ச்சி முடிவடைந்த பின் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ உமாமகேஸ்வரருடன் வீதி உலாவாக கோயிலுக்குச் சென்று ஆநிலையப்பருக்கும், பைரவருக்கும் பூக்குடலைகளில் கொண்டு வந்த மலர்களை சாத்தினர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது.

x