ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து, ரெங்கமன்னாரை மணந்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள மூலவர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்) தினமும் பூஜையின்போது, ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதேபோல, மதுரை, ஸ்ரீரங்கம்,திருப்பதியில் நடக்கும் முக்கியத் திருவிழாக்களின்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம்.
பட்டு வஸ்திரம், கிளி... தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வரும் நிலையில், நாளை (அக். 8) கருட சேவையின்போது ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலையை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார்.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமாலை தயார் செய்யப்பட்டு நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா மற்றும் உறுப்பினர்கள், கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.