புதுவையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்!


புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் இன்று புறப்பட்டனர்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா சார்பாக ஆண்டுதோறும் திருப்பதி திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் நிகழ்வு நடக்கிறது.

தொடர்ந்து 32வது ஆண்டாக திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட கடந்த 17ம் தேதி (புரட்டாசி மாதம் 1ம் தேதி) பாரதி பூங்காவில் உள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் மாலை அணிவித்து விரத அனுஷ்டிப்பு தொடங்கியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை புறப்பாடு நடந்தது. ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட ஏராளமான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷம் எழுப்பிய வண்ணம் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

இதுதொடர்பாக பக்தர்கள் கூறுகையில், "புதுவையில் இருந்து திருப்பதி 250 கி.மீட்டர் ஆகும். நாளுக்கு 40 கி.மீட்டர் என நடந்து 11ந் தேதி இரவு திருமலையை அடைவோம். மறுநாள் 12ந் தேதி ஏழுமலையானை தரிசித்து புதுவை திரும்புகிறோம்" என்றனர்.

x