சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும்: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகன்மோகன் ஆவேசம்!


ஹைதராபாத்: திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பியதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரை விசாரிக்க சுதந்திரமான சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்றார்.

அமராவதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், "உச்ச நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, ஆதாரமற்ற தகவல்களை கூறி பொதுமக்களின் கோபத்தை தூண்ட முயன்றார். அவருக்கு கடவுள் பக்தி இருந்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், “ சந்திரபாபு நாயுடு அரசியலை மதத்துடன் கலக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பல்வேறு ஊடகங்கள் சுட்டிக் காட்டியதை நாம் பார்த்தோம். முறையான ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்பியிருக்க கூடாது. ஒரு பொய்க்காக, அவர் எண்ணற்ற பொய்களை சொன்னார். அவருக்கு கடவுள் பயம் இல்லை. அவர் அரசியலுக்காக எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருந்தார் என்பதைப் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.

முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு, விலங்குகளின் கொழுப்பு அடங்கிய தரமற்ற நெய்யைப் பயன்படுத்தி திருப்பதி லட்டு தயாரித்ததாக எழுந்த புகாரை விசாரிக்க, சிபிஐ மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக வலைதளப் பதிவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளார். அவர், "திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க சிபிஐ, ஆந்திர காவல்துறை மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகள் அடங்கிய எஸ்ஐடியை அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நான் வரவேற்கிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

x