மும்பை: தங்கர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாநில தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தனர். அவர்கள் வலையில் விழுந்ததால் காயமின்றி தப்பித்தனர்
நர்ஹரி ஜிர்வால் மற்றும் ஒரு பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திராலயா என்று அழைக்கப்படும் மகாராஷ்டிர தலைமை செயலகத்தில் 3 வது மாடியில் இருந்து குதித்தனர். தற்கொலை முயற்சிகளைத் தடுக்க 2018 இல் அமைக்கப்பட்ட வலையில் விழுந்ததால் அவர்கள் காயமின்றி தப்பித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவைச் சேர்ந்த ஜிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கர் சமூகத்தை பழங்குடியினர் (ST) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மந்த்ராலயாவிலிருந்து குதித்தனர். தங்கர் சமூகத்தை பழங்குடியின பிரிவில் சேர்க்க அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் சில பழங்குடியின எம்எல்ஏக்கள் மந்திராலயா வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
மாநிலத்தில் உள்ள தங்கர் சமூகம் தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் உள்ளது. அச்சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் தங்களை எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள தங்காட் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சமூகம் என்று தங்கர் சமூகத்தினர் கூறி வருகின்றனர்.