குலசையில் தசரா கொடியேற்றத்துடன் துவங்கியது - காப்புக் கட்டி வேடமணிந்த பக்தர்கள்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்புக் கட்டி வேடமணிந்தனர்.

இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூரு அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு இன்று (அக்.03) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலாவாக கொண்டுவரப்பட்டு, காலை 10.33 மணிக்கு கோயில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் 'தாயே முத்தாரம்மா', 'எங்கள் அம்மா முத்தாரம்மா', 'ஓம் காளி, ஜெய் காளி' என விண்ணதிர முழக்கமிட்டனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், பழம், பன்னீர், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கொடியேற்றத்தை தொடர்ந்து கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்தனர்.

விழா நாட்களில் இவர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். கொடியேற்ற நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறு தசரா குழுவினர், ஆன்மிக, சமூக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானங்கள், குடிநீர், உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும், தினமும் மாலையில் கோயில் கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்துக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் 10ம் திருவிழாவான வரும் 12ம் தேதி நடைபெறும். இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரனை வதம் செய்வார். இதில் தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

தொடர்ந்து அக்டோபர் 13ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதியுலா புறப்படு நடைபெறும். மாலை 4 மணி அளவில் அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன், கொடி இறக்கப்படும்.

மேலும், பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ம.அன்புமணி, உதவி ஆணையர் க.செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் வே.கண்ணன், கோயில் செயல் அலுவலர் இரா.இராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

x