பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் இன்று (அக்.3) காலை தொடங்கியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி இன்று (அக்.3) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு காலை 9.30 மணிக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதை முன்னிட்டு விநாயகர், மயில், குதிரை மற்றும் கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, உச்சி கால பூஜையின் போது பழநி மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயிலில் காப்பு கட்டுதல் நடைபெற்றது.
மலைக்கோயிலில் போகர் ஜீவசமாதியில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலைத் தொடர்ந்து, புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆசிரமத்திற்கு புறப்பாடு நடைபெற்றது. பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.
அக்.12-ம் தேதி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜையும், பிற்பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். இதன் பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடும், மாலை 5 மணிக்கு பெரிய நாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமார சுவாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வும் நடைபெற்றன.