ராமநாதபுரம்: புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று (அக்.2) ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் அங்குள்ள சேதுபந்தன ஆஞ்சநேயர் கோயில், வெள்ளை விநாயகர் கோயில்களில் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக ராமநாதபுரத்திலிருந்து சேதுகரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சுகாதாரமற்ற நிலை: அங்குள்ள ஆண்கள், பெண்கள் உடை மாற்றும் அறைகள் சுகாதாரமின்றி எங்கு பார்த்தாலும் பக்தர்கள் விட்டுச் சென்ற உடைகள் மற்றும் ஈர மண், பிளாஸ்டிக் குப்பைகள் என சுகாதாரமின்றி காணப்பட்டதால் பக்தர்கள் முகம் சுளித்தனர். மேலும், அங்குள்ள கழிப்பறைகளும் சுகாதாரமாக இல்லை. கடற்கரையைச் சுற்றி, கழிவறைகள், உடைமாற்றும் அறைகள் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் விட்டுச் சென்ற உடைகளாக கிடந்தன.
அவற்றை சேகரிக்கவும், குப்பைகளை அகற்றவும் சேதுக்கரை ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சேதுகரைக்கு வந்த வாகனங்களுக்கு இருசக்கரத்திற்கு ரூ.15, கார்களுக்கு ரூ.30, வேன்களுக்கு ரூ.50, பேருந்துகளுக்கு ரூ.100 என ஊராட்சி சார்பில் கட்டணம் வசூலித்தனர். ஆனால் பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதேபோல், தேவிபட்டினம் நவபாஷான கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதன்பின் அங்குள்ள கடலடைத்த ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தனர்.