ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழா: வைக்கோல் பிரி சுற்றி நேர்த்திக் கடன்


மதுரை: மேலூர் அருகே வெள்ளலூர் நாடு ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மேலூர் அருகே வெள்ளலூரை தலைமையிடமாகக் கொண்டு 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளலூர் நாடு என அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிகாரர் சுவாமியும், ஏழைகாத்த அம்மனும் காவல் தெய்வங்களாகும். புரட்டாசி மாதம் ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக கிராமத்தினர் 15 நாட்களுக்குமுன் திருவிழாவிற்கு நாள் குறித்து, 7 சிறுமிகளை தெய்வமாக தேர்வு செய்தனர். அன்றிலிருந்து கிராமத்தினர் விரதம் மேற்கொண்டனர். 15-ம் நாளான இன்று வெள்ளலூர் கோயில் வீட்டிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் 10 கிமீ தூரமுள்ள ஏழைகாத்த அம்மன் கோயிலுக்கு நடந்து சென்றனர். இதில் ஆண்கள் வைக்கோல் பிரிகளை உடலில் சுற்றி பல்வேறு முகமூடிகளை அணிந்து நேர்த்தி செய்தனர்.

திருமணமான பெண்கள் மாலைகள் அணிந்து மண் கலயங்களில் பாலை ஊற்றி தென்னங் குருத்து பாலைகளுடன் மதுக்கலயங்கள் சுமந்து சென்றனர். திருமணமாகாத பெண்கள் மண் பொம்மைகள் சுமந்தும், சிறுவர்கள் பூக்கொடை சுமந்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முதியவர்கள் மேலாடையின்றி வேட்டி, சேலையுடன் மதுக்கலயம் சுமந்து சென்றனர்.

அப்போது தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 சிறுமிகள் தங்க ஆபரணங்கள் அணிந்து ஆசி வழங்கியவாறு சென்றனர். இதில் பல்வேறு பகுதியிலிருந்தும் திருவிழாவைக் காண வந்திருந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

x