பத்மனாபபுரம் அரண்மணையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக 3 சுவாமி விக்கிரகங்கள் புறப்பாடு!


பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்ற சுவாமி விக்ரகங்கள்.

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து தேவாரக்கட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் விக்கிரகங்கள் இன்று புறப்பட்டுச் சென்றது.

அப்போது பாரம்பரியமிக்க மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக - கேரள அதிகாரிகள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பழங்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது 10 நாள் நவராத்திரி விழா குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் கோலகலமாக நடத்தப்பட்டது. பின்னர் 1840ம் ஆண்டு முதல் திருநாள் மகாராஜா காலத்தில் நிர்வாக வசதிக்காக இந்நிகழ்சி திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அப்போது குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், கம்பரால் வழங்கப்பட்ட பத்பநாபபுரம் அரண்மனை சரஸ்வதி அம்மன் விக்கிரகம் ஆகிய 3 சுவாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. நவராத்திரி விழா முடிவடைந்த பின் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு அந்த சிலைகள் கொண்டு வரப்படுவது வழக்கம்.

பாரம்பரியமான இந்த நவராத்திரி விழா 3ம் தேதி தொடங்குவதால் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் புறப்படும் நிகழ்ச்சி இன்று காலை பத்பநாபபுரம் அரண்மனையில் நடைபெற்றது. முன்னதாக, முதற்கட்டமாக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், வேளிமலை முருகன் விக்ரகங்கள் பல்லக்கில் மாலையில் பத்மனாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது.

பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் திருவனந்தபுரம் புறப்பட்ட சுவாமி விக்ரகங்களுக்கு தமிழக, கேரள போலீஸார் அளித்த அணிவகுப்பு மரியாதை.

இதையடுத்து, பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் இன்று காலை மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள தேவசம் அமைச்சர் வாசவன், தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் மன்னரின் உடைவாளை எடுத்து குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் பழனிக் குமாரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட அறங்காவலர்க் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் தமிழக- கேரள அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானையிலும், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகங்கள் பல்லக்கிலும் எழுந்தருளின. அப்போது அரண்மனை வளாகத்தில் தமிழக - கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி சுவாமி சிலைகளுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து சுவாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரம் நவாராத்திரி விழாவுக்கு புறப்பட்டுச் சென்றன.

குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில் பாரம்பரிய மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊர்வலம் இன்று இரவு குழித்துறை மகாதேவர் கோயிலை சென்றடையும். அங்கிருந்து நாளை மீண்டும் ஊர்வலம் புறப்பட்டு களியக்காவிளை எல்லையை அடையும். அங்கு கேரள போலீஸார் மற்றும் கேரள தேவசம் அதிகாரிகளிடம் குமரி சுவாமி சிலைகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறும். நாளை இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை அடையும் சுவாமி விக்கிரகங்கள் அங்கு வைக்கப்படும். பிறகு அங்கிருந்து 3ம் தேதி காலையில் புறப்படும் சுவாமி சிலை ஊர்வலம் மாலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை அடையும்.

அங்கு தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்கத்தில் உள்ள கொலு மண்டபத்திலும், குமாரகோயில் முருகன் ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோயிலிலும் பூஜைக்கு வைக்கப்படும். நவராத்திரி பூஜைகள் முடிந்து மீண்டும் சுவாமி சிலைகள் பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த கோயில்களில் வைக்கப்படும்.

x