வடபழனி கோயிலில் நவராத்திரி விழா: அக்.3-ம் தேதி முதல் சக்தி கொலு தொடக்கம்


சென்னை: வடபழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா, நாளை மறுநாள் (அக்.3) தொடங்கி 12-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களும் ‘சக்தி கொலு’ எனும் பெயரில் பிரம்மாண்ட கொலு வைக்கப்படுகிறது. இதையொட்டி, அக்.3-ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜைகள் நடத்தப்பட்டு, அக்.12-ம் தேதி உச்சிகாலத்துடன் நிறைவடைகிறது.

அம்மன் கொலு சந்நிதியில் காலை 11 முதல் 11.30 மணி வரை, மாலை 6 முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. மேலும், அக்.11-ம் தேதி காலை 7.30 முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு, ரூ.250-ஐ அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சார்ச்சனை முடிவில் அம்பாளின் பிரசாதம் வழங்கப்படும். அக்.12-ம் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி காலை 7 முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

x