சிவனருள் பெற்ற அடியார்கள் – 30


ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாகிய சிவபெருமான் மீது இடையறாத அன்பு வைத்த அடியார் பெருமக்களுள் மிக முக்கியமானவர் சுந்தரமூர்த்தி நாயனார். தென்னாடு முழுவதும் சைவ மணம் கமழச் செய்த இவர் அடியார்க்கு இன்னமுது அளித்து, தலங்கள்தோறும் சென்று ஈசனைப் பாடி, திருநீற்றின் மகிமையை உலகறியச் செய்தார். சைவ சமயத்தில் சக மார்க்கத்தை கடைபிடித்தார்.

சுந்தரர்

கிபி எட்டாம் நூற்றாண்டில் திருமுனைப்படி நாட்டில் உள்ள திருநாவலூரில் ஆதிசைவர் குலத்தில் சடையனார் - இசைஞானி தம்பதிக்கு மகனாக சுந்தரர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரர். சிவாகம முறைப்படி வழிபாடு செய்யும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரால் சுந்தரர் வளர்க்கப்பட்டார்.

ஒரு சமயம் நம்பியாரூரர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற அரசர் நரசிங்கமுனையர், குழந்தையை தம்மோடு அழைத்துச் செல்ல விரும்பினார். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ளச் சென்றபோது, அக்குழந்தை தனது பால்ய நண்பர் சடையனாரின் மகன் என்பதை அறிகிறார். தாம் வந்த விஷயம் குறித்து சடையனார் தம்பதியிடம் கூற, அவர்களும் குழந்தையை அரசருடன் அனுப்பி வைத்தனர்.

சுந்தரர்

அன்றுமுதல், அரண்மனையில் அரசருக்கு உரிய அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று ஓர் இளவரசனைப் போன்றே வளர்ந்தார் நம்பியாரூரர். தக்க வயதை அடைந்ததும் நம்பியாரூரருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

திருமணத்துக்கு முதல் நாள் ஆரூரர் வெள்ளைக் குதிரையில் ஏறி திருநாவலூரில் இருந்து சடங்கவி சிவாச்சாரியாரின் புதல்வியை மணமுடிக்க புத்தூருக்குப் புறப்பட்டார். மணமேடையில் அமர்ந்திருந்த நம்பியாரூரரை சிவனடியார் வேடம் தாங்கி வந்த சிவபெருமான் தன்னருகே அழைத்து, “நீ எனக்கு பரம்பரை அடிமை. அதனால் திருமணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் வா” என்றார்.

“அந்தணனுக்கு அந்தணர் எப்படி அடிமையாக இருக்க முடியும்?” என்று கேட்ட ஆரூரர் சிவனடியாருடன் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார். உடனே சிவனடியார், “அந்தக் காலத்தில் உனது பாட்டனார், எனக்கு அடிமையாக இருப்பது குறித்து ஓலை எழுதிக் கொண்டுத்துள்ளனர்” என்று கூறி அந்த ஆதாரத்தைக் காண்பித்தார். அதை வாங்கிய ஆரூரர், யாரும் எதிர்பாரா வண்ணம் அதை கிழித்து எறிந்தார். இதுபோல பல பிரதிகள் இருப்பதாகக் கூறிய சிவனடியார், அதன் அசல் பிரதியை எடுத்துக் காட்டினார்.

அதில், ‘திருநாவலூரில் இருக்கும் ஆரூரன் என்ற பெயருடைய நான் திருவெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு அடிமை. நானும் என் வழிவரும் மரபினரும் இவருக்கு அடிமைத் தொழில் செய்து வருவோம்’ என்று இருந்தது. இதை ஊர் மக்களும் ஆமோதித்தனர். உண்மை நிரூபிக்கப்பட்டதால், ஆரூரர் சிவனடியாருடன் புறப்பட்டார்.

வரும் வழியெல்லாம் சிவனடியார் மீது கோபத்துடன் இருந்தார் ஆரூரர். நம்பியாரூராரை திருவெண்ணெய் நல்லூரில் உள்ள திருவருள்துறை என்னும் ஈசன் உறையும் கோயிலுக்கு சிவனடியார் அழைத்துச் சென்றார். கோயிலுக்குள் நுழைந்த சமயம் அவ்விடத்தை விட்டு மறைந்த சிவனடியார், உமையொரு பாகனாக உமையாளோடு நம்பியாரூரருக்கு காட்சி அருளினார்.

மகிழ்ச்சியில் திளைத்த நம்பியாரூரரை தமிழ் பாடல்கள் பாட, சிவனடியார் அறிவுறுத்தினார். என்ன பாடுவது என்று நம்பியாரூரார் வினவ, “சிறிது நேரம் முன்பு என்னை திட்டினாயே.. பித்தா என்று... அப்படியே தொடங்கு” என்று கூறி, “பித்தா பிறைசூடி” என்று சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார். உடனே திருவைந்தெழுத்தை தியானித்தவாறே, “பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா” என்று பாடினார் சுந்தரர். அன்று முதல் பல தலங்களுக்குச் சென்ற சுந்தரர், ஈசன் மீது பல பாடல்களைப் பாடினார்.

ஈசனைத் தொழுதல், தாய் - தந்தை, குருநாதரைப் பேணுதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்நன்றி அறிதல் போன்ற நற்செயல்களை செய்தால் சிவ இன்பத்தை அடைவது உறுதி என்ற சைவ சமயத்தின் அடிப்படை கோட்பாட்டுக்கு ஏற்ப செயல்படலானார். அதிகாலை உறக்கத்தில் இருந்து எழுந்து, தூயநீர் கொண்டு நீராடி, உடலில் திருநீறு பூசி, ஈசனை நினைந்து, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பாடி, திருமுறை ஓதி, ஐந்தெழுத்து ஓதுதல் ஆகியவற்றை கடைபிடித்து, ஈசனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் அனைவரையும் சேரும் வண்ணம், செய்தார். சிவநெறி தழைக்கச் செய்தார்.

பல தலங்களை தரிசித்து பாடும்போது, நம்பியாரூரர் உணவின்றி தவித்தபோது, சிவபெருமானே அடியவர் கோலத்தில் வந்து அவரது பசியைப் போக்கியுள்ளார். தாகம் தீர்த்துள்ளார். சிவபெருமானின் இனிய தோழரானார் நம்பியாரூரர். தனது தோழர் அழகாக இருப்பதால் அவரை ‘சுந்தரர்’ என்று சிவபெருமான் அழைத்தார். சிவபெருமான் மீது சுந்தரர் கொண்டிருந்த பக்தி சக மார்க்கம் ஆகும். தோழருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவபெருமான்.

திருவாரூரில் சுந்தரர் பரவை நாச்சியாரை மணமுடித்த பின், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணம் முடிக்க சிவபெருமான் தூது சென்றார். திருமணம் குறித்த பிரச்சினையில் இருந்து சுந்தரரை விடுவித்தார்.

சுந்தரர் பாடிய பாடல்களை ‘சுந்தரர் தேவாரம்’ என்று அழைப்பதுண்டு. பாடல்கள் பாடி அவிநாசியில் முதலை விழுங்கிய குழந்தையை, அதன் வாயில் இருந்து மூன்றாண்டு வளர்ச்சியுடன் உயிர்ப்பித்தது, செங்கற்களை பொன்னாகப் பெற்றுக் கொண்டது, சிவபெருமான் கொடுத்தனுப்பிய பொன்னை, விருத்தாசலத்தில் உள்ள ஆற்றில் போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்தது, காவிரியாறு பிரிந்து இவருக்கு வழிவிட்டது ஆகியவை இவரது வாழ்வில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் ஆகும்.

தனது 18-வது வயதில் சிவபெருமானோடு தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் கொண்டார் சுந்தரர். இவரது விருப்பத்தை ஏற்ற சிவபெருமான், இவர் கைலாயம் வருவதற்காக வெள்ளை யானையை அனுப்பினார். அதில் ஏறி சுந்தரர் கைலாயம் அடைந்தார். அங்கிருந்த ஈசனும் பார்வதி தேவியும் சுந்தரரை வரவேற்று முக்தி அளித்தனர்.

‘சிவனடியார் அனைவருக்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 29

x