கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய போது, சுழன்று தடுமாறியதால் அதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 6 பயணிகள், விமானி உயிர் தப்பினர்.
இந்த ஆண்டு, கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட நான்கு வழிபாட்டுத் தலங்களில் மூன்று யாத்திரை கடந்த 10ம் தேதி அன்று தொடங்கியது. பத்ரிநாத் யாத்திரை நுழைவு வாயில் கடந்த 12ம் தேதி அன்று திறக்கப்பட்டன. இந்த நான்கு யாத்திரையும் 'சார் தாம்' யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்து மதத்தில் 'சார் தாம்' யாத்திரை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிக யாத்திரையாக உள்ளது. இந்த பயணம் பொதுவாக ஏப்ரல் - மே முதல் அக்டோபர் - நவம்பர் வரை நடக்கும்.
ஒருவர் கடிகார சுழற்சி திசையில் 'சார் தாம்' யாத்திரையை முடிக்க வேண்டும் என்பது பக்தர்களிடையே உள்ள நம்பிக்கை.
எனவே, 'சார்தாம்' யாத்திரை யமுனோத்ரியில் தொடங்கி, கங்கோத்ரியை நோக்கி, கேதார்நாத் வழியாகச் சென்று, இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது. தற்போது 'சார்தாம்' யாத்திரையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை, கேதார்நாத் ஹெலிபேடில் இருந்து 7 பேர் (6 பயணிகள், ஒரு விமானி) சென்ற ஹெலிகாப்டர், தொழில்நுடப் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஹெலிபேடில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சுழன்றவாறே தரையிறங்கியது.
இதனால் அங்கு நின்று கொண்டிருந்த யாத்ரீகர்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே 'சார்தாம்' அதிகரித்த கூட்டம் காரணமாக, யாத்திரையை ஒழுங்குபடுத்த அனைத்து யாத்ரீகர்களும் பதிவு செய்வதை உத்தராகண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் ஆஃப்லைன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால், இப்போது ஆன்லைனில் பதிவு செய்த பின்னரே பக்தர்கள் 'சார்தாம்' யாத்திரைக்கு வர முடியும்.
இதையும் வாசிக்கலாமே...
சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்