குட்நியூஸ்... சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 27 இடங்களில் இலவச வைஃபை சேவை!


இலவச வைஃபை சேவை

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கட்டணமில்லா இலவச வைஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் பூஜை நடைபெற்று பின்னர் கடந்த 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்தது.

இதையடுத்து நடை அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 30-ம் தேதி நடை மகர விளக்கு பூஜைக்காக, நடை திறக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக அதிகரிக்கும் பக்தர்கள் வரத்து

மண்டல பூஜை காலத்தில் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் வருகிற 15-ம் தேதி அதிகாலை, மகர சங்கரம பூஜையும், மாலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

பம்பை முதல் சன்னிதானம் வரை 27 இடங்களில் வைஃபை வசதி

இந்த நிலையில் மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கட்டணமில்லா இலவச வைஃபை சேவை வழங்க தேவசம்போர்டு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பம்பை முதல் சன்னிதானம் வரை 27 இடங்களில் வைஃபை சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x