சித்ரா பௌர்ணமி கோலாகலம்... திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்பு... 2500 சிறப்பு பேருந்துகள்!


திருவண்ணாமலை

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், 2,500 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிவலம் வரும் பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலை சிவனாகவே உருவகப்படுத்தப்படுவதால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவதால் ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பேருந்துகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாளை சித்ரா பௌர்ணமி கொண்டாடப்படுவதால் இன்று மாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்குவார்கள். அதனை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் மொத்தம் 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அருணாச்சலேஸ்வரர் கோயில்

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்றைய தினம் 527 சிறப்பு பேருந்துகளும், நாளை 628 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் தலா 30 பேருந்துகளும், மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 90 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அதுமட்டுமில்லாமல் கோடைக்காலம் என்பதால் கிளாம்பாக்கத்தில் இருந்து இன்றும், நாளையும் 40 குளிர்சாதன பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு டிஐஜிக்கள் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட சுமார் 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

x