சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 22, 23ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வரும் 23ம் தேதி சித்ரா பவுர்ணமி வருவதை ஒட்டி, பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், 'சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 22, 23ம் தேதிகளில் ஏராளமானோர் பயணிப்பர். இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 22ம் தேதி 527 பேருந்துகளும், 23ம் தேதி 628 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து வரும் 22ம்தேதி 30 பேருந்துகளும், 23ம் தேதி 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம் தேதி அன்று 910 பேருந்துகளும், 23ம் தேதி அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்துகள் 40, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம்தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும். மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile APP மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த வசதியினை பொதுமக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!
நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!
உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!