வனவிலங்குகள் அச்சம்... சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி கட்டுப்பாடு!


சொரிமுத்து அய்யனார் கோயில்

களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சொரிமுத்து அய்யனார் கோயிலில்

திருநெல்வேலியை சேர்ந்த சாவித்திரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் - களக்காடு முண்டந்துறை இடையிலான அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். புலிகள் காப்பகமாக விளங்க கூடிய இந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு ஆடி, தை அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் அதிகளவிலான பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் அன்றைய தினத்திற்கு பின்னரும் அப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருப்பதுடன், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார். எனவே குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முண்டந்துறை சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு செல்வது போல் செல்கின்றனர். முன்பெல்லாம் தீ பந்தங்கள் ஏந்தி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அதிக ஒளி பாய்ச்சும் வகையிலான விளக்குகளுடன் கூடிய வாகனங்களில் பயனிக்கின்றனர். புலிகள் காப்பக பகுதியில் புலிகளை காண்பது அறிதாக இருக்கிறது.

மேலும் இரவு நேரங்களில் கூட வன விலங்குகள் வெளியே வர அச்சம் அடைகின்றன. சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனை மீறி அதிகளவிலான பக்தர்களை அனுமதித்துள்ளனர். எனவே இந்த ஆண்டு விழாவின் போது குறிப்பிட்ட அளவு பக்தர்களையே அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

x